9 லினக்ஸும் குனு திட்டமும்

இப்பேதம் குறித்து மேலும் அறிய குனு/லினக்ஸ் கேள்வி பதில் பகுதியையும், ஏன் குனு/லினக்ஸ்? பக்கத்தையும் குனுவினைப் பற்றி கேள்விப் பட்டிராத குனு பயனர்கள் ஆகியப் பக்கங்களையும் வாசிக்கலாம்.

கணினியினைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் குனு அமைப்பின் மாறுபட்ட வெளியீட்டினைப் பயன்படுத்துகின்றோம் என்பதை உணராமலேயே பயன்படுத்துகின்றனர். விசித்திரமானச் சம்பவங்களின் விளைவாக, இன்று பரவலாக பயன்படுத்தப் படும் குனுவின் வெளியீடு பெரும்பாலும் “லினக்ஸ்” என்றே அறியப் படுகின்றது. குனு திட்டத்துடன் இதற்குள்ளத் தொடர்பினை பெரும்பாலான பயனர்கள் அறியாமலே உள்ளனர்.

லினக்ஸ் என்றொன்று இருக்கின்றது. இம்மக்கள் அதனைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அது இயங்கு தளம் அன்று. லினக்ஸ் ஒரு கருவாகும். தாங்கள் இயக்கும் ஏனைய நிரல்கட்கு இயந்திரத்தின் வளங்களை ஒதுக்கும் ஒரு நிரல்.கருவும் இயங்கு தளத்தின் இன்றியமையாத பாகந்தான். ஆனால் தன்னந்தனியாக அது பயனற்றது. முழுமையானதொரு இயங்கு தளமென்னும் நோக்கத்தில் மாத்திரமே அது பணி செய்ய முடியும். சாதாரணமாக லினக்ஸ் குனு இயங்கு தளத்துடன் பயன்படுத்தப் படுகிறது. முழுமையான அமைப்பென்பது அடிப்படையில் குனு. லினக்ஸ் அதன் கருவாகச் செயல்படுகின்றது.

லினக்ஸெனும் கருவுக்கும் முழுமையான அமைப்புக்கும் உள்ள வித்தியாசத்தினை பெரும்பாலான பயனர்கள் அறியாது இருக்கிறார்கள். முழு அமைப்பினையுமே அவர்கள் “லினக்ஸ்” என அழைக்கின்றனர். குழப்பமான இப் பெயர் பிரயோகம் புரிதலை பேணவில்லை. இப்பயனர்கள் அனைவரும் சிறு உதவியுடன் 1991 ல் லைனஸ் டோர்வால்ட்ஸ் முழு இயங்கு தளத்தினையும் உருவாக்கியதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

லினக்ஸ் ஒரு கருவென்பது நிரலாளர்களுக்குப் பொதுவாகத் தெரியும்.முழு அமைப்பையும் அவர்களும் லினக்ஸ் என்றே பொதுவாகக் கேள்விப்படிருப்பதால் , முழு அமைப்பினையும் கருவினை அடிப்படையாகக் கொண்டு பெயரிடும் மரபை பெரும்பாலும் ஆமோதிக்கின்றனர். உதாரணத்திற்கு கருவினை லைனஸ் டோர்வால்ட்ஸ் இயற்றிய பிறகு, அதன் பயனர்கள் அதனுடன் பொருந்தக் கூடிய பிற மென்பொருள்களை தேடியதாகவும்,அங்ஙனம் யுனிக்ஸ் போறதொரு இயங்கு தளத்திற்குத் தேவையான அனைத்தும் ஏற்கனவே கிடைத்ததைக் (எந்தவொரு காரணமும் இல்லாமல்) கண்டெடுத்ததாகவும் பலர் நம்புகின்றனர்.

அவர்களுக்கு கிடைத்தது ஏதோ விபத்தால் விளைந்தது அல்ல. அது முழுமைப் பெறாத குனு அமைப்பு. குனு திட்டம் 1984 லிருந்து இயங்கு தளமொன்றை உருவாக்க பணிபுரிந்து வந்தக் காரணத்தால் கிடைக்கப் பெற்ற கட்டற்ற மென்பொருட்கள் சேர்க்கப் பட்டு ஒரு முழு அமைப்பு உருவானது.குனு செயற்திட்டத்தில் யுனிக்ஸ் போன்றதொரு குனு எனும் கட்டற்ற அமைப்பினை உருவாக்கும் இலட்சியத்தினை முன்மொழிந்திருந்தோம். குனு திட்டத்தின் முதல் அறிவிப்பும் குனு அமைப்பின் பூர்வாங்கத் திட்டங்கள் குறித்து விரித்துரைக்கின்றது. லினக்ஸ் இயற்றப் பட்டபொழுது குனு கிட்டத்தட்ட நிறைவினை எட்டியிருந்தது.

குறிப்பிட்ட பணியினைச் செய்யும் பொருட்டு குறிப்பிட்ட மென்பொருள் உருவாக்க வேண்டுமென்பதை பெரும்பாலான கட்டற்ற மென்பொருள் திட்டங்கள் இலக்காகக் கொள்ளும். உதாரணத்துக்கு லைனஸ் டோர்வால்ட்ஸ் யுனிக்ஸ் போன்றதொரு கருவினை இயற்ற முற்பட்டார். டொனால்ட் கினட்ச் உரைப் பகுப்பிற்கென ஒரு செயலியினை (டெக்ஸ்) இயற்ற முற்பட்டார். பாப் ஸ்கீய்பஃலர் சாளர அமைப்பொன்றினை இயற்ற முற்பட்டார் (எக்ஸ் சாளர அமைப்பு). இத்தகையத் திட்டங்களை அத்திட்டங்களிலிருந்து வரக் கூடிய குறிப்பிட்ட நிரல்களைக் கொண்டு மதிப்பிடுவது இயற்கையானது.

குனு திட்டத்தின் பங்களிப்பினை இங்ஙனம் நாம் அளவிட்டால் எத்தகையதொரு முடிவிற்கு நம்மால் வர இயலும்? வட்டொன்றினை விநியோகிக்கும் ஒருவர் தங்கள் “லினக்ஸ் வழங்களில்” ஒட்டுமொத்த மூல நிரல்களில் கிட்டத்தட்ட 28% சதவிகிதத்தினைக் கொண்டு, தனிப்பெரும் பங்கினை குனு மென்பொருள் பெற்றிருந்ததாக கண்டறிந்தார். மேலும் அமைப்பின் இருப்பிற்கே அத்தியாவசியமான முக்கிய பாகங்களைக் இது உள்ளடக்கியிருந்தது.லினக்ஸ் ஏறத்தாழ 3 சதவிகிதம் தான். ஆக அமைப்பின் நிரலை யார் இயற்றினார் என்பதை வைத்து தாங்கள் ஒரு பெயரினைத் தேர்வு செய்யப் போகின்றீர்கள் என்றால் மிகவும் பொருத்தமானத் தேர்வு “குனு” வாகத்தான் இருக்கும்.

ஆனால் கேள்வியினை அணுகுவதற்கு இதனைச் சரியான முறையாக நாங்கள் கருதவில்லை. குனு குறிப்பிட்ட மென்பொருள் பொதிகளை உருவாக்க வேண்டி உருவானத் திட்டம் அல்ல. இப்பொழுதும் அப்படித்தான். சி ஒடுக்கி ஒன்றினை உருவாக்கிட விழைந்த திட்டம் அல்ல. இருந்தபோதும் நாங்கள் அதனைச் செய்தோம். உரைத் தொகுப்பு பயன்பாடொன்றை உருவாக்கிட விழைந்த திட்டமுமல்ல. இருந்த பொழுதும் ஒன்றை நாங்கள் உருவாக்கினோம். குனு திட்டத்தின் இலக்கு குனு என்ற முழுமையான கட்டற்ற யுனிக்ஸ் போன்றதொரு இயங்கு தளத்தினை உருவாக்குவது.

அமைப்பிலுள்ள கட்டற்ற மென்பொருட்களுக்கு பலர் பங்களித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்மதிப்பில் பங்குண்டு. குனு திட்டம் ஒரு ஒருங்கிணைக்கப் பட்ட அமைப்பினை உருவாக்க முனைந்த காரணத்தால் அது அங்ஙனம் ஆனது. மேலும் அது பயனுள்ள நிரல்களின் தொகுப்பு மாத்திரம் அல்ல. முழுமையானதொரு கட்டற்ற இயங்குதளத்தினை உருவாக்கத் தேவையான நிரல்களை நாங்கள் பட்டியலிட்டோம். மேலும் அப்பட்டியலில் உள்ளவற்றை முறைப்படி இனங்கண்டு, இயற்றி அல்லது மக்களைக் இனங்கண்டு இயற்ற முற்பட்டோம். கவர்ச்சியற்ற(1) ஆனால் இன்றியமையாத பாகங்களை இயற்றவும் செய்தோம். அவை இல்லாமல் ஒரு அமைப்பினைத் தங்களால் பெற இயலாது. எங்களால் இயற்றப் பட்ட அமைப்பின் சிலப் பாகங்கள், நிரலாக்கக் கருவிகள், அவையாகவே நிரலாளர்கள் மத்தியில் பிரபலமாயின. ஆனால் கருவிகளாக இல்லாதப்(2) பலப் பாகங்ளை இயற்றினோம். நாங்கள் செஸ் விளையாட்டு ஒன்றினையும் உருவாக்கினோம். ஏனெனில் முழுமையான அமைப்பொன்றுக்கு நல்ல விளையாட்டுக்களும் தேவை.

1990 ம் வருடத்தின் துவக்கத்தில் கருவினைத் தவிர ஏனைய அனைத்தையும் நாங்கள் ஒன்றிணைத்திருந்தோம் (அதோடு மாக் மீது இயங்கும் குனு ஹர்ட் கருவிலும் நாங்கள் பணிபுரிந்து கொண்டிருந்தோம்) . இக்கருவை உருவாக்குவதென்பது நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகக் கடினமாக இருந்தது. குனு ஹர்ட் 2001 லிருந்து நம்பகத்தன்மையுடன் பணிபுரியத் துவங்கியது. குனு ஹர்ட்டினைக் கொண்ட குனு அமைப்பினை வெளியிட நாங்கள் ஆயத்தமாகி வருகின்றோம்.

லினக்ஸ் கிடைத்த காரணத்தினால், அதிருஷ்ட வசமாக, நாங்கள் ஹர்ட்டுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாது போனது. லினக்ஸினை லைனஸ் டோர்வால்ட்ஸ் இயற்றியப் பொழுது கடைசியாக இருந்த இடைவெளியியை நிரப்பினார். குனு அமைப்புடன் லினக்ஸினையும் ஒன்றிணைத்து முழுவதும் கட்டற்ற தன்மையுடைய அமைப்பினை மக்களால் இயற்ற முடிந்தது: லினக்ஸினை சார்ந்த குனுவின் அமைப்பு. சுருக்கமாக குனு/லினக்ஸ் அமைப்பு.. ஆரம்ப காலத்து லினக்ஸ் வெளியீட்டுக் குறிப்பு குனுவின் பகுதிகளைப் பயன்படுத்தும், லினக்ஸ் ஒரு கருவென்பதை ஏற்றது: “லினக்ஸுடன் பயன்படுத்தப் படும் பெரும்பாலான கருவிகள் குனு மென்பொருளாகும். மேலும் அவை குனு காபிலெப்ஃடின் கீழ் வருபவை. இக் கருவிகள் வழங்கலில் இல்லை – மேலும் விவரங்களுக்கு எம்மையோ (அல்லது குனுவையோ) கேளுங்கள்.”

இவற்றை ஒன்றாக கோர்ப்பது கேட்பதற்குச் சுலமாக இருக்கலாம், அது அதிக முக்கியத்துவம் இல்லாத பணியாக இருந்து விடவில்லை. லினக்ஸுடன் பணியாற்றும் பொருட்டு சில குனு பாகங்களில்(3) குறிப்பிடத் தக்க மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது.“ பெட்டியைத் திறந்ததும்” பணி புரியத் தக்க முழுமையானதொரு வழங்கலை ஒருங்கிணைப்பதும் மிகப் பெரிய பணியாக இருந்தது. எப்படி அமைப்பினை துவக்குவது மற்றும் நிறுவுவது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வுத் தர வேண்டியிருந்தது.நாங்கள் அத்தகைய நிலையினை அடையாது இருந்தக் காரணத்தால் இதனை எங்களால் ஈடு செய்ய முடியவில்லை. பல்வேறு வழங்கல்களை உருவாக்கியோர் குறிப்பிடத்தக்க பங்களித்தனர்.

குனு திட்டம் குனு அமைப்போடு கூடவே குனு/லினக்ஸ் அமைப்புகளையும் ஆதரிக்கின்றது. நிதியும் அளிக்கின்றது. லினக்ஸ் தொடர்புடைய குனு சி நிரலக விரிவாக்கங்களை மீண்டும் இயற்ற நாங்கள் நிதி அளித்தோம். இதன் காரணமாக அவை தற்பொழுது நல்ல முறையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய குனு/லினக்ஸ் வழங்கல்கள் மாற்றங்கள் ஏதுமற்ற நடைமுறையிலுள்ள நிரலகத்தினைப் பயன்படுத்துகின்றன. டெபியன் குனு/ லினக்ஸ் வழங்கலின் உருவாக்கத்தின் ஆரம்ப கட்டத்திற்கும் நாங்கள் நிதியளித்தோம்.

எங்களின் அனைத்துப் பணிகளுக்காகவும் நாங்கள் இன்று லினக்ஸ் சார்ந்த குனு அமைப்பினை பயன்படுத்துகின்றோம். அதனைத் தாங்களும் பயன்படுத்துவீர்கள் என நினைக்கின்றோம். குனு/லினக்ஸின் மாறுபட்ட பல வடிவங்கள் இன்று கிடைக்கப் பெறுகின்றன (“வழங்கல்கள்”) என அவை அழைக்கப் படுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை கட்டுடைய மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றன. அதனை உருவாக்குவோர் குனு கொள்கைகளைக் காட்டிலும் லினக்ஸுடன் தொடர்புடைய கொள்கையினைக் கடைபிடிக்கின்றனர். ஆனால் முற்றிலும் கட்டற்ற குனு/ லினக்ஸ் வழங்கல்களும் உள்ளன.

தாங்கள் குனு/ லினக்ஸ் பயன்படுத்துகின்றீர்களோ இல்லையோ, தயவு செய்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில்“ லினக்ஸ் ” என்ற பெயரைப் பயன்படுத்தி பொது மக்களை குழப்பாதீர்கள். லினக்ஸ் ஒரு கரு. அமைப்பின் இன்றியமையாத முக்கியமான ஒரு பாகம். ஒட்டுமொத்த அமைப்பு கிட்டத்த்ட குனு அமைப்பு. லினக்ஸ் அதில் சேர்க்கப் பட்டுள்ளது. இதன் கூட்டமைப்பினைப் பற்றி தாங்கள் பேசுகிறபொழுது தயவு செய்து “குனு/ லினக்ஸ்” என்றழைக்கவும்.

மேற்கோளிடும் பொருட்டு “குனு/ லினக்ஸுக்கு” தாங்கள் இணைப்பினை வழங்க விழைந்தால், இப்பக்கமும் http://www.gnu.org/gnu/the-gnu-project.html பக்கமும் உகந்தத் தேர்வுகள். கருவாகிய லினக்ஸினைத் தாங்கள் குறிப்பிட்டு அதற்கு மேற்கோளிட விரும்பினால் http://foldoc.doc.ic.ac.uk/foldoc/foldoc.cgi?Linux அதன் பொருட்டு பயன்படுத்த உகந்த இணைப்பாக இருக்கும்.

பிற்சேர்க்கைகள்: குனுவினைத் தவிர, வேறொருத் திட்டமும் சுயேச்சையாக கட்டற்ற யுனிக்ஸ் போன்றதொரு இயங்குதளத்தினைப் உருவாக்கியுள்ளது. இது பி.எஸ்.டி என வழங்கப் படுகின்றது. இது யு.சி பெர்க்லியில் உருவாக்கப் பட்டது. அது 1980 களில் கட்டுடையதாக இருந்தது, 1990 களின் துவக்கத்தில் கட்டற்றதானது. இன்று இருக்கக் கூடிய கட்டற்ற இயங்கு தளமொன்று உறுதியாக ஒன்று குனு அமைப்பின் வழி வந்திருக்கும் , அல்லது பி.எஸ்.டி யினைப் போலிருக்கும்.

பி.எஸ்.டியும் குனுவின் வழிவகைதானா என மக்கள் சிலச் சமயங்களில் கேட்பதுண்டு. தங்களின் நிரல்களை கட்டற்றதாக்க பி.எஸ்.டியை உருவாக்குவோர் குனு திட்டத்தின் உதாரணத்தினால் உந்தப் பட்டனர். மேலும் குனு இயக்கத்தினரின் முன்முனைந்த கோரிக்கைகள் அவர்களை ஏற்க வைக்க உதவி புரிந்தது. ஆனால் நிரல் சற்று மேல்படர்ந்திருந்தது. குனு அமைப்பும் அதன் வழிவந்தவையும் சில பி.எஸ்டி நிரல்களை பயன்படுத்துவது போலவே, பி.எஸ்.டி அமைப்பும் இன்று சில குனு நிரல்களைப் பயன்படுத்துகின்றன. ஒட்டு மொத்தமாகப் பார்க்கிற பொழுது தனந்தனியே பரிணாமம் கொண்ட இரு வேறு அமைப்புகள் அவை. பி.எஸ்.டி உருவாக்குவோர் கருவினை உருவாக்கி அதனை குனுவுடன் இணைக்க வில்லை. ஆகையால் குனு/பிஎஸ்டி எனும் பெயர் சூழ்நிலைக்குப் பொருந்தாது.(4)

குறிப்புகள்:

  1. கவர்ச்சியற்ற ஆனால் இன்றியமையாத பாகங்கள் குனு ஒன்றிணைப்பாளர், ஜி.ஏ.எஸ் மற்றும் இணைப்பர், ஜி.எல்.டி (இவையிரண்டு தற்சமயம் குனு பின்யுடில்ஸ் பொதியின் அங்கங்களாகும்), குனு டார் முதலியவற்றை உள்ளடக்கியவை.
  2. உதாரணத்திற்கு, பார்ன் அகைன் ஷெல், போஸ்ட் ஸ்கிரிப்ட் வரியொடுக்கியான கோஸ்ட்ஸ்கிரிப்ட், மற்றும் குனு சி நிரலகம் போன்றவை நிரலாக்கக் கருவிகளல்ல. குனு காஷ், குநோம் மற்றும் குனு செஸ்ஸும் இத்தகையதே.
  3. உதாரணத்திற்கு குனு சி நிரலகம்..
  4. ஆனால் இக்கட்டுரை இயற்றப் பட்டதிலிருந்து உருண்டோடிய வருடங்களில் குனு சி நிரலகம் ப்ஃரீபிஎஸ்டி கருவிற்கு உகந்ததாக்கப் பட்டது. இதனால் குனு அமைப்பினை அக்கருவுடன் இணைக்க முடிந்தது. குனு/லினக்ஸைப் போலவே, இவை குனுவின் வழிவந்தவையே. ஆகவே அவை அவற்றின் கருவினை அடிப்படையாகக் கொண்டு குனு/கேப்ஃரீபிஎஸ்டி அல்லது குனு/கேநெட்பிஎஸ்டி என வழங்கப் படுகின்றன. அதனதன் பணித் திரையில் சாதாரணப் பயனர்களால் குனு/லினக்ஸ் மற்றும் குனு/*பிஎஸ்டி களுக்கிடையே வித்தியாசம் காண்பது அரிதானது.

License

Icon for the Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License

கட்டற்ற மென்பொருள் by ம. ஸ்ரீ. ராமதாஸ் is licensed under a Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *