3

டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பம், தகவல்களை நகலெடுப்பதையும் மாற்றுவதையும் எளிமையாக்குவதன் மூலம் உலகிற்கு தம் பங்கினை அளிக்கிறது. கணினிகள் இதனை தம் அனைவருக்கும் எளிமையாக்க உறுதியளிக்கின்றன.

அனைவரும் இவை இப்படி சுலபமாக இருந்துவிட வேண்டும் என்று விரும்புவது இல்லை. பதிப்புரிமை முறையானது மென்பொருளின் நிரல்களுக்கு “சொந்தக்காரர்களை” கொடுக்கிறது. இவர்களில் பெரும்பான்மையானோர் மென்பொருளின் ஆக்கப்பூர்வமான பயன் இதர மக்களுக்குச் சென்றடையாத வண்ணம் தடை ஏற்படுத்தவே தீர்மானிக்கிறார்கள். நாம் பயன்படுத்தும் மென்பொருளை நகலெடுக்கவும் மாற்றவும் அவர்களால் மட்டுமே இயல வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.

பதிப்புரிமை சட்டம் அச்சுத் துறையோடு வளர்ந்தது. இத்துறை மிகப்பெரிய அளவில் நகல் உற்பத்தி செய்வதற்கான ஒரு தொழில் நுட்பமாகும். மிகப்பெரிய அளவில் நகல் எடுப்போரைத் தடுப்பதால் இத்தொழில்நுட்பத்திற்கு பதிப்புரிமை பொருந்துகிறது. வாசிப்போரின் சுதந்தரத்தை இது தடை செய்து விடவில்லை. அச்சகம் எதையும்நடத்த இயலாத சாதாரண வாசகர், புத்தகங்களை பேனா மையின் துணை கொண்டே நகலெடுக்க முடியும். இதற்காக சிலர் வழக்குகளை சந்திக்க நேர்ந்ததுண்டு.

அச்சுத் துறையோடு ஒப்பிடுகையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளைந்து கொடுக்க வல்லது. தகவலானது டிஜிட்டல் வடிவத்தில் கிடைக்கும் பொழுது பிறரோடு பகிர்ந்துகொள்வது எளிமையாகிறது. வளைந்து கொடுக்கும் இத்தன்மையால் பதிப்புரிமை போன்ற சட்டங்களுடன் ஒத்துப்போவது கடினமாகிறது. கொடுங்கோன்மையோடு கூடிய மட்டமான முறைகளை கையாண்டு மென்பொருளுக்கான பதிப்புரிமையை நிலைநாட்ட முயலும் முயற்சிகளுக்கு இதுவே காரணமாகிறது. மென்பொருள் பதிப்புக் கூட்டமைப்பின் (Software Publishers Association) கீழ்காணும் நான்கு வழக்கங்களைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

* தங்கள் நண்பருக்கு தாங்கள் உதவுவது, உருவாக்கியவருக்கு அடிபணியாத செயல் என்ற தீவிரப் பிரச்சாரம்.

* உடன் பணிபுரிவோர் பற்றி துப்பு கொடுப்போருக்கு பரிசளிப்பது.

* சட்ட விரோதமான காரியங்களை நாங்கள் செய்கிறோம் என்பதை அறிந்திருக்கவில்லை என்பதை நிரூபிக்குமாறு கோரி (காவல் துறையின் துணையுடன்) பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அரங்கேற்றப்படும் சோதனைகள்.

* நகல் எடுத்ததற்காக அல்ல மாறாக நகலெடுக்கும் வசதிகளை காக்காமலும் அதன் பயன்பாட்டைத் தடுக்காமலும் சென்றமைக்காக ஆஐகூஇன் டேவிட் லாமசியா(David LaMacchia) போன்றோர் மீது வழக்குத் தொடுத்தமை. (மென்பொருள் பதிப்புக் கூட்டமைப்பின் தூண்டுதலின் பெயரில் அமெரிக்க அரசு செய்தது.)

இந்நான்கு முறைகளும் முன்னாள் சோவியத் யூனியனில் நடைமுறையிலிருந்த பழக்கங்களை ஒத்திருக்கின்றன. அங்கே நகலெடுக்கும் கருவி ஒவ்வொன்றும், தடைசெய்யப்பட்ட வழிகளில், நகலெடுப்பதை தடுக்கும் பொருட்டு, காவலாளிகளை கொண்டிருக்கும். “சமிஸ்டாட்” (Samizdat) ஆக தகவலை நகலெடுத்து இரகசியமாக ஒவ்வொருவரும் கைமாற்ற வேண்டும். இதில் சிறிய வேறுபாடு உண்டு. சோவியத் யூனியனில் தகவல் கட்டுப்பாட்டின் நோக்கம் அரசியல். அமெரிக்காவில் இதன் நோக்கம் இலாபம். நோக்கங்களைக் காட்டிலும் செயல்களே நம்மை பாதிக்கின்றன. தகவல்களை பகிர்ந்துகொள்வதை தடுக்கும் எந்தவொரு முயற்சியும் ஒரேவிதமான முறைகளுக்கும் முரட்டுத் தன்மைகளுக்கும் இட்டுச் செல்கின்றன. தகவல்களை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பைத தீர்மனிக்கும் அதிகாரம் அவர்களுக்கு தரப்பட வேண்டும் என்பதற்கு உடைமையாளர்கள் பல காரணங்களை முன்வைக்கிறார்கள்:

பெயர் சூட்டிக் கொள்ளுதல்

மக்களை ஒரு குறிப்பிட்டக் கோணத்தில் சிந்திக்க வைப்பதன் பொருட்டு “திருட்டுத்தனம்”, “போலித்தனம்” முதலிய தரம் தாழ்ந்த சொற்களையும், “அறிவுசார் சொத்து”, “சேதம்” முதலிய அறிவாளித்தனமான பதங்களையும் உடைமையாளர்கள் பயன்படுத்துகிறார்கள். நிரல்களுக்கும் பௌதீக பொருட்களுக்கும் இடையேயுள்ள சாதாரண ஒப்புமை பற்றி.

“திடப்பொருள் சார்ந்த சொத்து குறித்த நமது சிந்தனைகளும் கண்ணோட்டங்களும் பிறரிடமிருந்து ஒரு பொருளை எடுப்பது சரியா என்பதைப் பற்றியது. இதனை ஒரு பொருளை நகல் எடுப்பதற்கு அப்படியே பொருத்த இயலாது. ஆனால் உடைமையாளர்கள் எப்பாடுபட்டாவது அப்படி பொருத்தக் கோருகிறார்கள்”.

மிகைப்படுத்துதல்

பயனர்கள் அவர்களாகவே நிரல்களை நகலெடுக்கும்போது, பொருளாதார இழப்புகளும் தீமைகளும் தங்களுக்கு ஏற்படுவதாக உடைமையாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் நகலெடுப்பது உடைமையாளரின் மீது எவ்விதமான நேரடி பாதிப்பையும் ஏற்படுத்துவது கிடையாது.

யாருக்கும் தீங்கு விளைவிப்பதும் கிடையாது. மாறாக நகலெடுத்த ஒருவர் உடைமையாளரிடமிருந்து நகலொன்றை பெற்ற காரணத்திற்காக ஏதாவது கொடுத்திருந்தால் வேண்டுமானால் உடைமையாளருக்கு இழப்பு ஏற்படலாம்.

சிறிது யோசித்துப் பார்த்தல் இத்தகைய மக்கள் நகல்களை வாங்கியிருக்க மாட்டார்கள். ஆயினும் ஒவ்வொருவரும் நகலை வாங்கியிருக்கக்கூடும் என பாவித்துக்கொண்டு உடைமையாளர்கள் அவர்களின் “நஷ்டத்தை” கணக்கெடுப்பார்கள். மிகைப்படுத்தப்படவது அப்பட்டமாக தெரிகிறது.

சட்டம்

உடைமையாளர்கள் தற்போதைய சட்டத்தின் நிலைமையையும், கிடைக்கக்கூடிய கடுமையான தண்டனைகளையும் அடிக்கடி சொல்லி பயமுறுத்துகிறார்கள். கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அறங்களை இன்றைய சட்டங்கள் பிரதிபலிக்கின்றன என்பதே இது சுட்டும் முக்கியமான விஷயமாகும். அதே சமயம் இத்தண்டனைகளை இயற்கையின் நியதிகளாக, யார் மீதும் குறைகூறாத வண்ணம் கருதுமாறு நாம் பணிக்கப்படுகின்றோம்.

தாஜா செய்யும் இப்போக்கானது கூர்ந்த சிந்தனையின் முன் நிற்பதற்கு திராணியற்றது. பழக்கவழக்கத்தால் ஏற்பட்ட மனம்போன பாதைகளை மீண்டும் சுமத்த முற்படுகிறது.

சரியா தவறா என்பதைச் சட்டங்கள் தீர்மானிக்காது என்பது பிள்ளைப் பாடம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கருப்பினத்தைச் சார்ந்த ஒருவர் பேருந்தின் முற்பகுதியில் அமர்வது அமெரிக்காவின் பல மாகாணங்களில் சட்டப்படி தவறாகும். ஆனால் நிறவெறி பிடித்தவர்கள் மட்டுமே அப்படி உட்கார்வதை தவறெனச் சொல்வார்கள்.

இயற்கை உரிமங்கள்

தாங்கள் எழுதிய நிரல்களோடு தங்களுக்கு ஏதோ சிறப்பான தொடர்பு இருப்பதாகவும் அதன் காரணமாக தங்களின் விருப்பங்களும் ஈடுபாடுகளும் மற்ற எவருடையதைக் காட்டிலும், ஏன் ஒட்டுமொத்த உலகத்தைக் காட்டிலும் மேலானது எனவும் இயற்றியவர்கள் உடைமை கோருகிறார்கள். (சொல்லப் போனால் தனி நபர்களைக் காட்டிலும் நிறுவனங்களே மென்பொருட்களின் மீது பதிப்புரிமை கொள்கின்றன. இவ்வேறுபாட்டை விலக்கி வைக்க நாம் எதிர்பார்க்கப்படுகிறோம்.)

தங்களைக் காட்டிலும் இயற்றியவரே மேலானவர் என்றும் இதனை அறத்தின் கூற்றாகவும் தாங்கள் சொன்னால், பிரபலமான நிரலாளராகக் கருதப்படும் நான் உங்களுக்கு இதனை புதைகுழி என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக, இரண்டு காரணங்களுக்காக மக்கள் இயற்கையான உரிமங்களின் மீதான கோரிக்கைகளுக்கு அனுதாபம் கொண்டு விளங்குகிறார்கள்.

புலன் நுகர் பொருட்களொடு அளவிற்கு அதிகமாக ஒப்புநோக்குவது இதற்கான முதல் காரணம். நான் ஸ்பகெட்டி சமைத்தால், இன்னொருவர் அதை சாப்பிட்டால், என்னால் அதைச் சாப்பிட முடியாது என்பதனால், நிச்சயம் எதிர்ப்பேன். சாப்பிட்டவரின் செயல் அவருக்கு எவ்வளவு சாதகமாக அமைகிறதோ அதே அளவு எனக்கு பாதகமாக அமைகிறது. ஆக எங்களில் ஒருவர்தான் ஸ்பகட்டியை சாப்பிட முடியும். என்ன செய்ய? தார்மீக சமன்பாட்டை அடைய எங்களுக்குள் இருக்கும் சிறு வேறுபாடு போதுமானது.

நான் எழுதிய நிரலொன்றை தாங்கள் இயக்குவதும் மாற்றுவதும் தங்களை நேரடியாகவும் என்னை மறைமுகமாகவும்தான் பாதிக்கின்றன. அதன் நகலொன்றை தாங்கள் தங்கள் நண்பர் ஒருவருக்கு தருவது, என்னை பாதிப்பதை காட்டிலும் தங்களையும் தங்கள் நண்பரையுமே அதிகமாக பாதிக்கின்றது. இதனைச் செய்யக் கூடாதென்று தங்களைச் சொல்ல எனக்கு அதிகாரமில்லை. யாருக்கும்தான். இரண்டாவது காரணம், இயற்றியவர்களுக்கான இயற்கை உரிமமென்பது, ஏற்கப்பட்ட, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நமது சமூகப் பாரம்பரியம் என மக்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றை பார்த்தால் இதன் மறுபக்கமே உண்மையாகும். அமெரிக்காவின் அரசியல் சாசனம் இயற்றப்பட்டபோது இயற்கை உரிமங்கள் குறித்த சிந்தனைகள் பரிந்துரைக்கப்பட்டு உறுதியாக நிராகரிக்கவும்பட்டன. அதனால்தான் அரசியல் சாசனமானது பதிப்புரிமை முறையைத் தேவையானதாகக் கொள்ளாது அம்முறைக்கு அனுமதி மட்டும் வழங்குகிறது. அதனால்தான் பதிப்புரிமையை தற்காலிகமானதாக எடுத்துரைக்கிறது. பதிப்புரிமையின் நோக்கம் முன்னேற்றம் காணவே அன்றி இயற்றியவர்களுக்கு பரிசளிக்க அல்ல எனவும் சொல்கிறது. பதிப்புரிமை இயற்றியோருக்கு சிறிய அளவிலும் பதிப்பிப்போருக்கு பெரிய அளவிலும் பலனளிக்கிறது. நமது சமூகத்தின் நிரூபிக்கப்பட்ட மரபோ பதிப்புரிமை பொருமக்களின் இயற்கை உரிமங்களுக்கு தடை விதிக்கின்றது என்பதே ஆகும். மேலும் இது பொது மக்களின் பொருட்டு மட்டுமே நியாயப்படுத்த வல்லது.

பொருளாதாரம்

மென்பொருளுக்கு உடைமையாளர்கள் இருப்பது அதிக மென்பொருள் உற்பத்திக்கு வழிவகை செய்யும் என்பதே இறுதியாக முன்வைக்கப்படும் வாதம். மற்றவைகளோடு ஒப்பிடுகையில் இவ்வாதம் சற்றே உருப்படியான அணுகுமுறையை கொண்டு விளங்குகிறது. மென்பொருட்களைப் பயன்படுத்தும் பயனர்களைத் திருப்திபடுத்தவேண்டும் எனும் ஏற்கத்தக்க பயன்படுத்தும் பயனர்களைத் திருப்திபடுத்தவேண்டும் எனும் ஏற்கத்தக்க ஒரு இலக்கினை ஆதாரமாகக் கொண்டுள்ளது. அதிகமான சம்பளம் கொடுக்கப்பட்டால், அப்படி கொடுக்கப்படுகிற காரணத்தால், மக்கள் அதிகமாக உருவாக்குவார்கள் என்பது அனுபவப்பூர்வமாகத் தெளிவாகிறது.

ஆனால் இப்பொருளாதாரக் கூற்றும் தன்னிடத்தே ஒரு குறையை கொண்டு விளங்குகிறது. அது நாம் எவ்வளவு விலை கொடுக்க வேண்டியுள்ளது என்பதுதான் வேறுபாடு எனும் அனுமானத்தை ஒட்டி அமைகிறது. “மென்பொருள் உற்பத்திதான்ஞ் நாம் வேண்டுவது என்றும், உடைமையாளர்களை கொண்டிருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி கவலை இல்லை என்றும் அது அனுமானம் கொள்கிறது.

புலன் நுகர் பொருட்களுடனான தமது அனுபவங்களுடன் ஒத்துப் போவதன் காரணமாக மக்களும் இந்த அனுமானங்களை உடனே ஏற்றுக்கொண்டு விடுகிறார்கள்.

சான்ட்விச்சினை (sandwich) எடுத்துக் கொள்வோம். தங்களால் மற்றுமொரு சான்ட்விச்சினை இலவசமாகவோ அல்லது விலைக்கோ பெற்றுக்கொள்ள இயலும். அப்படி இருக்குமாயின் தாங்கள் கொடுக்கும் விலைதான் வித்தியாசம். தாங்கள் அதை விலை கொடுத்து வாங்குகிறீர்களோ இல்லையோ, சான்ட்விச்சின் சுவையும் அதிலுள்ள புரதச் சத்தும் ஒன்றாகவே இருக்கப்போகின்றன. மேலும் இவ்விரு தருணங்களிலும் தங்களால் சான்ட்விச்சினை ஒரு முறை மாத்திரமே சாப்பிட இயலும். கடைசியில் தங்கள் கையில் தங்கப் போகும் காசைத் தவிர வேறெந்த நேரடி பாதிப்பையும், சான்ட்விச்சிற்கு உடைமையாளர் இருந்தாரா இல்லையா என்பது ஏற்படுத்தப் போவதில்லை.

எந்தவொரு புலன் நுகர் பொருளுக்கும் இது பொருந்தும். அதற்கு உடைமையாளர் ஒருவர் இருக்கிறாரா இல்லையா என்பது அது எத்தன்மையது என்பதையோ அதை வாங்குகிற காரணத்தால் அதனைக் கொண்டு தாங்கள் என்ன செய்ய இயலும் என்பதையோ நேரடியாக பாதிக்காது.

ஆனால் அதுவே நிரலொன்றுக்கு உடைமையாளரொருவர் இருக்கிறாரென்றால், அது எத்தன்மையது என்பதும் அதன் நகலொன்றை வாங்குவதன் மூலம் தாங்கள் என்ன செய்யலாம் என்பதும் பாதிப்புக்குள்ளாகிறது. இவ்வேறுபாட்டுக்குக் காரணம் பணம் மட்டும் அல்ல. மென்பொருளுக்கு உடைமையாளர்களை கொண்டிருக்கும் முறையானது. மென்பொருள் உடைமையாளர்களை, சமுதாயத்துக்கு உண்மையாகவே அவசியமற்ற மென்பொருட்களை உருவாக்கவும் ஊக்குவிக்கின்றது. சிந்தைக்குள் சிக்காது அறத்துக்கு களங்கம் விளைவிப்பதால் இது நம் அனைவரையும் பாதிக்கின்றது.

சமூகத்தின் தேவைதான் என்ன? அதன் குடிமக்களுக்கு “உண்மையாகவே” கிடைக்கக்கூடிய தகவல்கள் வேண்டும். உதாரணத்திற்கு இயக்க மட்டுமல்லாது கற்க, வழுநீக்க, ஏற்று மேம்படுத்த வல்ல நிரல்கள் தேவை. ஆனால் மென்பொருள்களின் உடைமையாளர்கள் தருவது என்னவோ நம்மால் கற்கவும் மாற்றவும் இயலாத ஒரு கருப்புப் பெட்டி.

சமூகத்திற்கு விடுதலையும் தேவைப்படுகிறது. நிரலொன்றுக்கு உடைமையாளர் இருந்தால் பயனர்கள் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியைத் தாங்களே கட்டுப்படுத்தும் விடுதலையை இழக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக சமூகமானது தமது குடிகளிடையே பரஸ்பரம் ஒத்துழைத்து வாழக்கூடிய சிந்தனை வளர ஊக்குவிக்க வேண்டும். மென்பொருளின் உடைமையாளர்கள், இயற்கையாக நாம் நமது சுற்றத்தாருக்கு உதவுவதை “போலித்தனம்” என கூறினால் அது நமது சமூகத்தின் குடிமை இயல்பையே களங்கப்படுத்துவதாகும். ஆகையால்தான் நாங்கள் குசநந Softwareஎன்பது விலையினை அடிப்படையாகக் கொள்ளாது விடுதலையை அடிப்படையாகக் கொண்டது என்கிறோம்.

உடைமையாளர்களின் பொருளாதாரக் கூற்று பிழையானது, ஆனால் பொருளாதார பிரச்சனை என்னவோ உண்மைதான். சிலர் மென்பொருள் இயற்றுவதை சுகமாக கருதுவதன் காரணமாகவோ அல்லது அதன் மீதுள்ள ஈடுபாடு மற்றும் விருப்பத்தின் காரணமாகவோ மென்பொருள் இயற்றுகிறார்கள். ஆனால் மென்மேலும் மென்பொருட்கள் வளர வேண்டுமாயின் நாம் நிதி திரட்ட வேண்டும்.

பத்து ஆண்டுகளாக, கட்டற்ற மென்பொருள்களை உருவாக்குவோர் நிதி திரட்டுவதற்கான பல்வேறு முறைகளைக் கையாண்டு சில வெற்றியும் பெற்றுள்ளார்கள். யாரையும் பணக்காரர்களாக்கும் அவசியம் எதுவும் இல்லை. ஒரு சராசரி அமெரிக்க குடும்பத்தின் வருமானம் சுமார் 35 ஆயிரம் டாலர். நிரலெழுதுவதைவிட குறைந்த திருப்தி அளிக்கக்கூடிய பெரும்பாலான பணிகளுக்கு இதுவே போதுமான ஊக்கத் தொகையாக நிரூபணமாகியுள்ளது.

பரிவுத் தொகை அவசியமற்றுப்போக செய்த வரையில், பல வருடங்களுக்கு, நான் இயற்றிய கட்டற்ற மென்பொருளை மேம்படுத்தியதால் கிடைத்த வருவாயைக் கொண்டே வாழ்ந்து வந்தேன். ஒவ்வொரு மேம்பாடும் நிலையான வெளியீட்டோடு சேர்க்கப் பட்டமையால் இறுதியில் பொதுமக்களுக்கும் கிடைக்கக் கூடியதாக அமைந்தது. மற்றபடி முக்கியம் வாய்ந்ததாக எனக்கு தோன்றிய மாற்றங்களை செய்யாது, நுகர்வோர் விரும்பிய மேம்பாடுகளை நிறைவேற்றி தந்தமைக்காகத்தான் எனக்கு நிதியளிக்கப்பட்டது.

வரி விலக்குப் பெற்ற கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கத்திற்கான கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையானது குனு வட்டுக்கள், ஆவணங்கள் (CDs), டீலக்ஸ் வழங்கல்களை விற்பதன் வாயிலாகவும் (பயனர்கள் நகலெடுத்து மாற்றும் உரிமத்தோடு கூடியது), நன்கொடைகளின் மூலமாகவும் நிதி சேர்க்கிறது. தற்சமயம் இது ஐந்து நிரலாளர்களையும் மடல் விண்ணப்பங்களை கையாளக்கூடிய மூன்று பணியாளர்களையும் கொண்டு விளங்குகிறது.

ஆதரவு (Support) சேவைகளின் மூலமாக கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கும் சிலர் சம்பாதிக்கின்றனர். (இக்கட்டுரை எழுதப்பட்ட போது) ஏறத்தாழ ஐம்பது பணியாளர்களைக் கொண்ட சைக்னஸ் சப்போர்ட், தமது பணியாளர்களின் 15./. பணிகள் கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குவதாக இருக்கிறது எனக் கணக்கிட்டுள்ளது. இது மென்பொருள் நிறுவனமொன்றில் குறிப்பிடத்தக்க பங்காகும்.

இன்டல் (Intel), டோடோரோலா (Motorolo), டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் (Texas Instruments) மற்றும் அனலாக் டிவைசஸ் போன்ற நிறுவனங்களும் சி. (V) நிரலாக்கத்திற்கான குனு ஒடுக்கியின் தொடர்ச்சியான உருவாக்கத்திற்கு நிதியளிக்க ஒன்றிணைந்துள்ளார்கள். அதே சமயம் அடா (Ada) மொழியின் குனு ஒடுக்கிக்கு அமெரிக்க விமானப் படை நிதியளிக்கிறது. அதிக தரமுடைய நிதி ஆதாயம் தரக் கூடிய ஒடுக்கியை உருவாக்க இதுவே உகந்த முறையென்று அது கருதுகிறது. (சில காலங்களுக்கு முன்னர் விமானப் படையின் நிதியளிப்பு நிறைவடைந்தது. தற்போதும் குனு அடா ஒடுக்கி பயன்பாட்டிலுள்ளது. அதன் பராமரிப்புக்கான நிதி வணிகரீதியில் சேர்க்கப்படுகின்றது.)

இவையனைத்தும் மிகச்சிறிய அளவிலான உதாரணங்களே. கட்டற்ற மென்பொருள் இயக்கம் இன்னும் சிறிய அளவிலேயே இளமையுடன் இருக்கின்றது. அமெரிக்காவில் கேட்பவர்களின் உதவிபெறும் வானொலியின் எடுத்துக்காட்டானது பயனர்களை கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்காது இன்னும் பல செயல்களை ஆதரிக்க இயலும் எனவும் காட்டுகிறது.

கணினியினைப் பயன்படுத்தும் ஒருவராக தாங்கள் ஒரு தனியுரிம மென்பொருளைப் பயன்படுத்தலாம். தங்களின் நண்பர் ஒருவர் அதன் நகலைக் கேட்டால் முடியாது என மறுப்பது தவறாகிவிடும். பதிப்புரிமையினைக் காட்டிலும் ஒத்துழைப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரை மறைவான நெருக்கமான ஒத்துழைப்பு என்பது நல்லதொரு சமூகத்திற்கு வித்திடாது. தனி நபரொருவர் நேர்மையானதொரு வாழ்வினை பொதுப்படையாக பெருமையுடன் மேற்கொள்ள விழைய வேண்டும். இதன் அர்த்தம் தனியுரிம மென்பொருட்களை “வேண்டாம்” என்று சொல்வதே.

மென்பொருளை பயன்படுத்தும் பிற பயனர்களுடன் திறந்த மனதோடும் விடுதலை உணர்வோடும் ஒத்துழைக்கத் தங்களுக்கு உரிமை இருக்கிறது. மென்பொருள் பணி செய்யும் முறையினைக் கற்கும் ஆற்றல் கொள்ளவும், தங்களின் மாணாக்கருக்கு கற்றுக் கொடுக்கவும் தங்களுக்கு உரிமை இருக்கிறது. மென்பொருள் பழுதாகும் போது தாங்கள் விரும்பும் நிரலாளரைக் கொண்டு அதனை சரி செய்ய தங்களுக்கு உரிமை இருக்கிறது.

கட்டற்ற மென்பொருள் தங்களின் உரிமை.

 

License

Icon for the Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License

கட்டற்ற மென்பொருள் Copyright © 2015 by ம. ஸ்ரீ. ராமதாஸ் is licensed under a Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book