11 தங்கள் கணினியினைத் தங்களால் நம்ப முடியுமா?

தங்களின் கணினி யாருடையக் கட்டளைகளை ஏற்க வேண்டும்? பெரும்பாலானோர் தங்களின் கணினி தாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும், மற்றொருவர் சொல்வதை அல்ல என நினைக்கிறார்கள். “நம்பகக் கணிமை” எனும் பெயரினைச் சூட்டி, பெரிய ஊடக நிறுவனங்கள் (திரைப்பட நிறுவனங்களும், பதிவு நிறுவனங்களும் சேர்த்தே) , மைக்ரோசாப்ட், இன்டல் முதலிய கணினி நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து தங்கள் கணினி அவர்கள் சொற்படி கேட்க திட்டம் தீட்டுகின்றனர். (“பல்லாடியம்” என்பது இதனை ஒத்த மைக்ரோசாப்ஃடின் திட்டத்தின் பெயர்.) தனியுரிம மென்பொருட்கள் மட்டமான செயற்பாடுகளை ஏற்கனேவே உள்ளடக்கியிருந்திருக்கின்றன. ஆனால் இத்திட்டம் அதனை அகிலத்துக்கே உரியதாக்கிவிடும்.

அடிப்படையில் தனியுரிம மென்பொருளென்றால் அதன் செயற்பாட்டை தாங்கள் நிர்வகிக்க இயலாது என்று பொருள். தங்களால் மூல நிரல்களைக் கற்கவோ அல்லது மாற்றவோ இயலாது. புத்தியுள்ள வணிகர்கள், உங்களை கஷ்டத்தில் தள்ளி, தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தும் வழிகளைக் கண்டுபிடிப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. மைக்ரோசாப்ட் இதனை பல முறைச் செய்துள்ளது. விண்டோஸின் ஒரு வெளியீடு தங்கள் கணினியின் வன்தட்டில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து மென்பொருள் பற்றிய விவரங்களையும் மைக்ரோசாப்டுக்குத் தெரியப் படுத்தும் படிக்கு வடிவமைக்கப் பட்டிருந்தது. விண்டோஸ் மீடியா இயக்கியின் சமீபத்திய “ பாதுகாப்பு ” மேம்பாடு புதிய கட்டுப்பாடுகளுக்குத் பயனர்களை ஒப்புக் கொள்ளும் படிக் கோருகிறது. மைக்ரோசாப்ட் மட்டும் அல்ல. காசாவின் வர்த்தகக் கூட்டாளிகள், உங்களுடைய கணினியினை வாடகைக்கு விடும் படிக்கு, காசாவின் இசைப் பகிர்வு மென்பொருள் வடிவமைக்கப் பட்டுள்ளது. இம்மட்டமான வசதிகளெல்லாம் பெரும்பாலும் இரகசியமானவை. ஒரு கால் தங்களுக்குத் அது தெரிய நேர்ந்தாலும் அவற்றை அகற்றுவது கடினம். ஏனெனில் தங்களிடம் மூல நிரல்கள் இல்லை.

கடந்தக் காலங்களில் இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. “நம்பகக் கணிமை” இதனை ஊடுருவச் செய்யும். “நய வஞ்சகக் கணிமை” இதற்கு இன்னும் ஏற்புடையப் பெயராக இருக்கும். ஏனெனில் இத்திட்டத்தின் வடிவமைப்பு தங்களின் கணினி படிப் படியாகத் தாங்கள் சொல்வதைக் கேட்காமல் இருக்க உறுதி செய்வது. உண்மையில் பொதுப் பயன்பாட்டிற்கு ஒவ்வாத கணினியாக தங்கள் கணினியை மாற்றுவதே இதன் நோக்கம். ஒவ்வொரு செயலுக்கும் தனித் தனியே அனுமதி கோரப்படும்.

நய வஞ்சக கணிமையின் ஊடே நிறைந்துள்ள தொழில் நுட்பம் யாதெனின், டிஜிட்டல் உருதிரிப்பு மற்றும் ஒப்பத்துக்கான ஒருக் கருவியைக் கணினி கொண்டிருக்கும். இதற்கான துப்பு தங்களிடமிருந்து இரகசியமாக்கப் படும். தனியுரிம நிரல்கள் இக்கருவியினைப் பயன்படுத்தி நீங்கள் இயக்க வல்ல பிற நிரல்கள், தாங்கள் அணுக வல்லத் தரவுகள் அல்லது ஆவணங்கள் மற்றும் இவைகளைப் பகிர்ந்துக் கொள்ளும் நிரல்கள் முதலியவற்றை நிர்வகிக்கும். இந்நிரல்கள் இணையத்தின் மூலம் அனுமதிக்கான விதிகளை தொடர்ச்சியாக பதிவிறக்கி, தாங்கள் செய்யும் பணிகளின் மீது சுமத்தும். ஒரு வேளைத் தாங்கள் இணையத்தின் வழியாக தொடர்ச்சியாக புதிய விதிகள் கொணரப் படுவதை தவிர்த்தால் சில வசதிகள் தானாகவே செயலிழக்கும்.

தெளிவாக ஹாலிவுட் மற்றும் பதிவு நிறுவனங்கள் நய வஞ்சக கணிமையினை “டி.த.நி” (டிஜிட்டல் தடைகள் நிர்வாகம்) க்காக பயன்படுத்த திட்டம் தீட்டுகிறார்கள். இதனால் பதிவிறக்கப் பட்ட பதிவொளிகளையும், இசைகளையும் குறிப்பிட்ட ஒரு கணினியில் மாத்திரமே இயக்க இயலும். குறைந்தபட்சம் அவர்களிடமிருந்து பெறப்பட்ட அங்கீகரிக்கப் பட்ட கோப்புகளை, பகிர்வதென்பது அறவே முடியாது. பொது மக்களில் ஒருவராகிய உங்களுக்கு இவற்றை பகிர்வதற்கான திறனும் சுதந்தரமும் இருத்தல் அவசியம்.(உருத்திரிக்க இயலாத வெளியீடுகளை படைக்கவும், பதிவேற்றி பகிர்ந்துக் கொள்ளவும், யாராவது வழி கண்டு பிடிப்பார் என நான் எதிர்பார்க்கின்றேன். இதன் மூலம் டி.த.நி முற்றிலும் வெற்றிபேறாது. ஆனால் இம்முறைக்கு இது முழுமையானத் தீர்வாகாது.)

பகிர்வதை இல்லாது செய்வதே போதுமான தீமையை விளைவிப்பதுதான், ஆனால் அது இன்னும் மோசமடையக் கூடியது. மின்னஞ்சல்கள் மற்றும் ஆவணங்கள் மீதும் இதே வசதியினை பயன்படுத்த திட்டம் உள்ளது. இதனால் இரண்டு வாரங்களில் மின்னஞ்சல்கள் மறைந்து விடும் அல்லது ஆவணங்களை ஒரு நிறுவனத்தில் உள்ள கணினிகளில் மாத்திரமே வாசிக்க இயலும்.

தாங்கள் அபாயகரமாகக் கருதும் காரியமொன்றினை செய்யும் படிக்கு தங்களின் அலுவலக மேலாளர் தங்களுக்கு மடலிடுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாதம் கழித்து விபரீதம் விளைந்த பின்னர், தங்களால் அம்மடலைப் பயன்படுத்தி அது தங்களின் முடிவு அல்ல என நிரூபிக்க இயலாது. ஆணை மாயமாகும் மையால் இடப் பட்டமையால், “அதனை எழுதி வாங்கிக் கொள்வது ” என்பது தங்களை பாதுகாக்க இயலாது.

அறத்திற்குப் புறம்பான அல்லது சட்டவிரோதமான ஒரு திட்டத்தைப் பற்றி உங்கள் அலுவலக மேலாளரிடம் இருந்து மடல் வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு தங்கள் நிறுவனத்தின் தணிக்கை ஆவணங்களை ஒழித்து விடுவது அல்லது தடையின்றி முன்னேற வேண்டி தங்களின் தேச நலத்திற்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு ஆபத்தை அனுமதிப்பது. இன்றையச் சூழலில் இவற்றைப் பற்றி ஒரு நிருபருக்கு தெரியப் படுத்தி இச்செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரலாம். நய வஞ்சக கணிமை வரும் பட்சத்தில், நிருபரால் அவ்வாவணத்தை வாசிக்க இயலாது. அவரது கணினி அவர் சொல்வதைக் கேட்காது. நயவஞ்சகக் கணிமை ஊழலின் சொர்க்கமாகிவிடும்.

மைக்ரோசாப்ட் வோர்ட் போன்ற உரையாக்கப் பயன்பாடுகள் நய வஞ்சகக் கணிமையினைப் பயன்படுத்தி, தங்கள் கோப்பினை அவைக் காக்கும் போது, போட்டி போடும் வேறெந்த உரையாக்கப் பயன்பாடும் அதனை திறக்க இயலாத படி செய்து விடும். கடினச் சோதனைகளின் மூலம் வோர்ட் முறைமையின் இரகசியங்களை கண்டுபிடித்து கட்டற்ற உரையாக்கப் பயன்பாடுகளைக் கொண்டு வாசிக்கச் செய்ய வழி காண வேண்டும். உரைகள் காக்கப் படும் போது நய வஞ்சகக் கணிமையினைப் பயன்படுத்தி வோர்ட் ஆவணங்களை உருதிரித்தால், கட்டற்ற மென்பொருள் சமூகத்தால் அவற்றை வாசித்திடும் பொருட்டு மென்பொருள் உருவாக்க வாய்ப்பு இல்லாது போகலாம். ஒரு வேளை எங்களால் இயன்றாலும் அத்தகைய நிரல்கள் டிஜிட்டல் மில்லேனிய பதிப்புரிமைச் சட்டத்தால் தடைச் செய்யப் படும்.

நய வஞ்சகக் கணிமையினைப் பயன்படுத்தும் நிரல்கள் தொடர்ச்சியாக அனுமதி விதிகளை இணையத்திலிருந்து பதிவிறக்கும்.மேலும் அவ்விதிகளை தன்னிச்சையாக உங்கள் பணிகளின் மீது சுமத்தும். மைக்ரோசாப்டுக்கோ அல்லது யு.எஸ் அரசாங்கத்துக்கோ தாங்கள் இயற்றியக் கோப்பில் தாங்கள் கூறியவை பிடிக்கவில்லையெனில் , அக்கோப்பினை யாருமே படிக்க இயலாத வண்ணம் அத்துனை கணினிக்கும் புதிய ஆணைகளை பிறப்பிக்க முடியும். புதிய ஆணைகளை பதிவிறக்கும் ஒவ்வொரு கணினியும் ஆணையைப் பதிவிறக்கியதும் அடிபணியும் 1984 களில் இருந்த பிற்போக்குத் தனமான அழித்தலுக்கு தங்களின் எழுத்துக்கள் ஆளாகும். அதனைத் தங்களாலேயே வாசிக்க இயலாது போய்விடும்.

நய வஞ்சகக் கணிமையின் பயன்பாடு ஒன்று எத்தகைய பாதகமான செயல்களைச் செய்கிறது எனவும், அவை எத்தகைய வலியினை ஏற்படுத்தும் எனவும் கண்டறிந்து பின்னர் அவற்றை ஏற்கலாமா வேண்டாமா என முடிவு செய்யலாம் எனத் தாங்கள் நினைக்கலாம். அதனை ஏற்பதென்பது குறுகிய நோக்கமுடையதாகவும் முட்டாள் தனமாகவும் அமையும். விடயம் என்னவென்றால் தாங்கள் மேற்கொள்ளப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒப்பந்தம் நிலைக்காது. நிரலைப் பயன்படுத்தி பழகிவிட்டால் தாங்கள் அடிமையாகி விட்டீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். பின்னர் அவர்களால் ஒப்பந்தத்தை மாற்ற முடியும்.சிலப் பயன்பாடுகள் வேறு பலப் பணிகளைச் செய்யக் கூடிய மேம்பாடுகளைப் பதிவிறக்கும். மேம்படுத்த வேண்டுமா எனத் தேர்வுச் செய்யும் வாய்ப்புக் கூடத் தங்களுக்குத் தரப் படாது.

தனியுரிம மென்பொருளால் கட்டுபடுத்தப் படாமல் இருந்திட வேண்டி இன்று தாங்கள் அவற்றைப் புறக்கணிக்கலாம். தாங்கள் குனு/ லினக்ஸ் இயங்கு தளத்தையோ அல்லது வேறொரு கட்டற்ற மென்பொருளையோ பயன்படுத்தினால், அவற்றில் தனியுரிம மென்பொருட்களை நிறுவுவதைத் தவிர்த்தால், தாங்கள் தங்கள் கணினியைக் கட்டுப் படுத்துபவராவீர்கள். கட்டற்ற மென்பொருளொன்றில் மட்டமான ஒரு செயற்பாடு இருக்குமாயின், சமூகத்தில் உள்ள பிற உருவாக்குநர்கள் அதனை களைந்து விடுவார்கள். இதனால் தாங்கள் சரிசெய்யப்பட்ட வெளியீட்டை பயன்படுத்த இயலும். தனியுரிம இயங்கு தளங்களில் கூடத் தங்களால் கட்டற்ற பயன்பாட்டு நிரல்களையும் கருவிகளையும் இயக்க முடியும். ஆனால் இது முழுமையானச் சுதந்தரத்தினைத் தங்களுக்கு வழங்குவதாகாது. இருந்தும் பலப் பயனர்கள் இதனைச் செய்வதுண்டு.

நயவஞ்சகக் கணிமை கட்டற்ற இயங்கு தளங்கள் மற்றும் பயன்பாடுகளின் இருப்பையே கேள்விக் குறியதாக்குகின்றது. ஏனெனில் தங்களால் அவற்றை இயக்கவே இயலாது போகலாம். நயவஞ்சகக் கணிமையின் சில வகைகள் இயங்குதளமானது குறிப்பிட்ட நிறுவனத்தின் பிரத்யேக அனுமதியைப் பெறக் கோரலாம். கட்டற்ற இயங்கு தளங்களை நிறுவவே இயலாது போகலாம். சில வகையான நய வஞ்சகக் கணிமை இயங்கு தளத்தை உறுவாக்கியவரின் அனுமதியை ஒவ்வொரு நிரலும் பெற வேண்டும் எனக் கோரலாம். அத்தகைய கணினிகளில் கட்டற்ற மென்பொருளையே தங்களால் நிறுவ இயலாது. அங்ஙனம் செய்வது எப்படி எனத் தாங்கள் கண்டறிந்து பிறருக்குச் சொன்னால் அது குற்றமாகக் கருதப் படலாம்.

யு.எஸ் சட்டங்களில் அனைத்துக் கணினிகளும் நய வஞ்சகக் கணிமைக்கு ஆதரவளிக்கவும், பழைய கணினிகள் இணையத்தில் இணைய தடை விதிக்கவும் கோரும் சட்டங்களுக்கான பரிந்துரைகள் ஏற்கனவே உள்ளன. சிபிடிடிபிஏ (நுகருங்கள் ஆனால் நிரலெழுத விரும்பாதீர்கள் என நாங்கள் அச்சட்டங்களைச் சொல்வதுண்டு ) இத்தகையச் சட்டங்களில் ஒன்று. அவை உங்களை நய வஞ்சகக் கணிமைக்கு சட்ட ரீதியாக மாற வற்புறுத்தாத போதும், அதனை ஏற்க வேண்டி கொடுக்கப் படும் உளைச்சல் தாங்க இயலாததாக இருக்கும். பல வகைப் பட்டபிரச்சனைகளை விளைவித்தாலும், இன்று மக்கள் வோர்ட் வகையை தகவல் பரிமாற்றத்துக்கென பயன்படுத்துகின்றார்கள் (அணுக “வோர்ட் இணைப்புகளுக்கு முற்றுப் புள்ளி”). நயவஞ்சகக் கணிமைக்கு உட்பட்ட கணினியால் மாத்திரமே புத்தம்புதிய வோர்ட் ஆவணத்தை வாசிக்க இயலுமாயின், தனிப்பட்ட அவர்களின் செயலை மாத்திரம் கருத்தில் கொள்ளும் பலர் அதனைத் தழுவார்கள். நய வஞ்சகக் கணிமையினை எதிர்த்திட வேண்டி, ஏகோபித்த கருத்துடன் நாம் ஒன்றிணைந்து நிலைமையை எதிர் கொள்ள வேண்டும்.

நயவஞ்சகக் கணிமைக் குறித்து அறிய http://www.cl.cam.ac.uk/users/rja14/tcpa-faq.html னை அணுகவும்.

நய வஞ்சகக் கணிமையினை தடுக்க அதிக அளவிலான மக்கள் திரள வேண்டும். எங்களுக்கு உங்களின் உதவித் தேவை. எலக்ட்ரானிக் பிஃரான்டியர் பஃவுண்டேஷன் மற்றும் பொது அறிவு இயக்கத்தாற் நய வஞ்சகக் கணிமைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். கட்டற்ற மென்பொருள் அற்கட்டளையினால் ஆதரிக்கப் படும் டிஜிட்டல் குரல் திட்டமும் இதனையே செய்கிறது. அவர்களின் பணிகளை ஆதரிக்க ஒப்பமிட இத்தளங்களை பார்வையிடுங்கள்.

இன்டல், ஐபிஎம், ஹச்.பி/காம்பேக் அல்லது வேறு யாரிடமிருந்து தாங்கள் கணினியினை வாங்கினீர்களோ அவர்களின் பொது விவகாரத் துறைக்கு, நம்பகக் கணினியென்றப் பெயரில் தாங்கள் கட்டாயப் படுத்தப் பட விரும்பவில்லையெனவும், ஆகவே அத்தகைய கணினிகளை உருவாக்க வேண்டாம் என எழுதுவதன் மூலமாகவும் உதவலாம். நுகர்வோர் சக்தியை ஏற்க இது வழிவகுக்கும். இதனைத் தாங்கள் சுயமாகச் செய்தால் மேற்கூறிய நிறுவனங்களுக்குத் தங்கள் மடல்களின் பிரதிகளை அனுப்பவும்.

கூடுதல் விவரங்கள்

  1. குனு திட்டம் குனு தற்காப்பு மென்பொருளை விநியோகம் செய்கின்றது. இந்நிரல் பொதுத் துப்பு உருதிரிபினையும் டிஜிட்டல் ஒப்பங்களையும் நடைமுறைப் படுத்துகின்றது. இதனைத் தாங்கள் தனிப்பட்ட மற்றும் பாதுகாக்கப் பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பப் பயன்படுத்தலாம். குனு தற்காப்பு பணிபுரியும் விதத்தையும் அது நய வஞ்சகக் கணிமையிலிருந்து வேறுபடும் விதத்தையும் ஆராய்ந்து ஒன்று பயனுள்ளதாகவும மற்றொன்று படு பாதகமாகவும் எவ்வாறு அமைகிறது என்பதை அறியலாம்.குனு தற்காப்பினைப் பயன்படுத்தி உருதிரிக்கப்பட்டக் கோப்பினை ஒருவர் அனுப்பி, குனு தற்காப்பினைப் பயன்படுத்தி தாங்கள் அதனை உருமீட்டால், அதன் விளைவு தாங்கள் வாசிக்க, வழியனுப்ப, நகலெடுக்க மட்டுமல்லாது மீண்டும் உருதிரித்து பாதுகாப்பாக அனுப்ப வல்ல உரு மீட்கப் பட்ட ஆவணமொன்றுக் கிடைக்கும். நய வஞ்சகக் கணிமை பயன்பாடு ஒன்று சொற்களை திரையில் வாசிக்க அனுமதிக்கும். ஆனால் வேறு வழிகளில் தங்களால் பயன்படுத்தக் கூடிய ஆவணத்தை உருவாக்க அனுமதியாது. குனு தற்காப்பு ஒரு கட்டற்ற மென்பொருளாகும். பாதுகாப்பு வசதிகளை பயனர்களுக்கு கிடைக்கச் செய்கிறது. அவர்களும் அதனைப் பயன்படுத்துகின்றனர். நயவஞ்சகக் கணிமை பயனர்களின் மீது தடைகளைச் சுமத்துகிறது. அதாவது அவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.
  2. பயன்தரவல்ல அம்சங்களை மையமாக முன்வைத்து சொற்பொழிந்து தங்கள் கருத்துக்களை நய வஞ்சகக் கணிமையின் ஆதரவாளர்கள் முன்னிருத்துவார்கள். அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம், ஆனால் சற்றும் முக்கியமானது ஆகாது.பெரும்பாலான வன்பொருட்களைப் போல, நயவஞ்சகக் கணிமையின் வன்பொருளும் தீமைத் தராத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படலாம். ஆனால் இப்பயன்கள் நயவஞ்சகக் கணிமையினைச் சாராது வேறு விதமாகவும் செயற் படுத்தப் படலாம். தங்கள் கணினியைத் தங்களுக்கு எதிராக செயல்பட வைக்கும் மோசமான விளைவே நய வஞ்சகக் கணினியில் உள்ள முக்கியமான வேறுபாடு.

    அவர்கள் சொல்வதும் உண்மை. நான் சொல்வதும் உண்மை. இரண்டையும் ஒன்றிணைத்தால் தங்களுக்கு என்ன கிடைக்கும்? நாம் இழப்பதை நம் கவனத்துக்கு அப்பாலிட்டு, சிறு இலாபங்களைக் கொடுத்து நமது சுதந்தரத்தைப் பறிப்பதே நயவஞ்சகக் கணிமையின் திட்டம்.

  3. களைநிரல்களிடமிருந்து காக்கும் எனச் சொல்லிக் கொண்டு பலாடியத்தை மைக்ரோசாப்ட் வழங்குகின்றது. ஆனால் இப்பிரகடனம் அப்பட்டமானப் பொய். அக்டோபர் 2002 ம் மைக்ரோசாப்ட் ஆய்வொன்று பல்லாடியத்தின் கூறுகளில் ஒன்றாக நடைமுறையில் இருக்கும் இயங்கு தளங்களும் பயன்பாடுகளும் தொடர்ந்து இயங்கும் எனச் சொல்கிறது. ஆக இதுவரையில் களைநிரல்கள் செய்துவந்த அத்தனையையும் இனியும் செய்ய இயலும்.பல்லாடியம் தொடர்பாக “பாதுகாப்பு” என மைக்ரோசாப்ட் சொன்னால் அவை நாம் உண்மையில் பாதுகாப்பென எதனைக் கருதுவோமோ அதைப் பற்றியது அல்ல. அதாவது தாங்கள் விரும்பாத விடயங்களிலிருந்து கணினியைனைக் காப்பது. தாங்கள் அணுக இயலாத படிக்கு பிறருக்குத் தேவைப் படாத வழிகளில் தங்கள் தரவுகளின் நகல்களைத் தங்களின் கணினியில் காப்பது. அளிக்கையின் ஒருத் திரையில், பல்லாடியம் இரகசியமாக வைக்கக் கூடியவற்றின் பல வகைகளைப் பட்டியலிட்டது. “மூன்றாவதாக ஒருவரின்” இரகசியம் மற்றும் “ பயனரொருவரின் இரகசியம்”. ஆனால் “பயனரின் இரகசியங்களை” அது மேற்கோள் குறிகளுக்குள் அடக்கியிருந்தது. ஒருவேளை பல்லாடியத்தைப் பொருத்த வரையில் இது அபத்தம் என்பதாலோ என்னவோ.

    அவ்வளிக்கை பாதுகாப்பது தொடர்பாக நாம் அடிக்கடி பயன்படுத்தும் பிற சொற்களையும் பயன்படுத்தியிருந்தது. “ஆக்கிரமிப்பு”, “அபாயமான நிரல்”, “ஏமாற்றம்” மற்றும் “ நம்பகத் தன்மை ” முதலியன. ஆனால் அவை எதுவும் இயல்பாக அவைப் பொருள் கொள்ளப்படும் அர்த்தத்தில் இல்லை. “ஆக்கிரமிப்பு“ யாரோ ஒருவர் தங்களை புண்படுத்துகிறார் எனும் அர்த்தத்தில் இல்லை. மாறாக தாங்கள் இசையை நகல் எடுப்பது எனப் பொருள் பட்டிருந்தது. “அபாயமான நிரல்கள்” என்றால் தங்கள் கணினி என்ன செய்யக் கூடாதென்பதை இன்னொருவர் தீர்மானித்து அதனை தாங்கள் நிறுவியது என்று பொருள்.“ஏமாற்றுதல்” என்றால் பிறர் தங்களை முட்டாளாக்குவது அல்ல. தாங்கள் பல்லாடியத்தை முட்டாள் ஆக்குவது. இப்படிப் பல.

  4. தாங்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் யார் உருவாக்கினாரோ அல்லது தகவல்களைத் திரட்டினாரோ அவருக்கே உரித்தானது எனும் அடிப்படையை கொண்டிருக்கவேண்டும் என பல்லாடியம் உருவாக்குவோரது முந்தைய அறிக்கையொன்று சொல்கிறது. கடந்த கால அறச் சிந்தனைகளையும், சட்ட முறைகளையும் மாற்றி கட்டுக் கடங்காத அதிகாரத்தை இது பிரதிபலிக்கலாம். இம்முறைகளினிடையே உள்ள குறிப்பிடத் தக்க பிரச்சனை விபத்தால் விளைந்தவை அல்ல. அவை அடிப்படைக் கொள்கையால் விளைந்தவை. இவ்வடிப்படைக் கொள்கையையே நாம் நிராகரிக்க வேண்டும்.

இக்கட்டுரை கட்டற்ற மென்பொருள், கட்டற்ற சமூகம்: ரிச்சர்ட் ஸ்டால்மேனின் தேர்வு செய்யப் பட்ட கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளது.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *