13

நிரலாக்கம் உள்ளிட்ட பணிகளை கட்டற்று இருக்கும்படி செய்வதற்கான பொதுவான முறை காபிலெஃப்ட் ஆகும். இவ்வாறு படைக்கப்பட்டதிலிருந்து மாற்றப்பட்ட, விரிவாக்கப்பட்ட அனைத்தும் கட்டற்று இருத்தல் வேண்டும்.

நிரலொன்றை கட்டற்றது ஆக்க எளிய வழி அதனைப் பதிப்புரிமம் இழக்கச் செய்து பொதுவுடைமை ஆக்குவது. இது மக்கள் தாங்கள் விரும்புகின்ற பட்சத்தில் அவற்றின் மீது செய்யப்பட்ட மாற்றங்களை பகிர்ந்துகொள்ள அனுமதிக்கிறது. ஆனால் கூட்டுறவாட விரும்பாத சிலர், நிரலை தனியுரிம மென்பொருளாக ஆக்குவதற்கும் இது வழி வகுக்கிறது. அவர்கள் விரும்புகின்ற அளவிற்கு சிறிய அல்லது பெரிய அளவில் மாற்றங்களை செய்து தனியுரிம மென்பொருளாக வெளியிட அனுமதிக்கிறது. அம்மென்பொருளின் பிரதான ஆசிரியர் வழங்கிய சுதந்தரத்தை, அதனை தற்போது பெறுவோருக்கு கிடைக்காதபடி இது செய்கிறது. இடையே வந்தவர் அதனைப் பறித்துக் கொண்டார்.

குனு திட்டத்தில் எங்கள் இலக்கு அனைத்து பயனர்களுக்கும் குனு மென்பொருளை மாற்றுவதற்கும் மறுவிநியோகம் செய்வதற்குமான சுதந்தரத்தை வாங்குவது. இடைப்பட்ட ஒருவர் சுதந்தரத்தைப் பறிக்க நேர்ந்தால், சுதந்தரத்தினைப் பெற இயலாத பல பயனர்கள் இருக்கும் படி நேரலாம். ஆகையால் குனுவினை பொதுவுடைமை ஆக்காமல் காபிலெஃப்ட் செய்கிறோம். மென்பொருளினை மாற்றியோ மாற்றாமலோ, மறுவிநியோகம் செய்யும் ஒருவர், அதனை மாற்றவும் மறுவிநியோகம் செய்யவும் அனுமதிக்கும் சுதந்தரத்தோடு அதனை செய்தல் வேண்டும் என காபிலெஃப்ட் கூறுகிறது. அனைத்து பயனரும் சுதந்தரத்தினை பெற்றிடுவதை காபிலெஃப்ட் உறுதிசெய்கிறது.

கட்டற்ற மென்பொருளோடு இணைத்து கொள்வதற்கு ஏனைய நிரலாளர்களுக்கும் காபிலெஃப்ட் ஒரு ஊக்கத்தினைத் தருகிறது. குனு சி++ஒடுக்கி முதலிய முக்கிய மென்பொருட்கள் இருப்பதற்கும் இதுவே முக்கியக் காரணம்.

கட்டற்ற மென்பொருள் ஒன்றினை மேம்படுத்த விரும்புவோர் அப்படி செய்தற்கு உரிய அனுமதியினைப் பெற்று பங்களிக்கச் செய்யவும் காபிலெஃப்ட் உதவுகிறது. இத்தகைய நிரலாளர்கள் பெரும்பாலும் கூடுதல் பணம் ஈட்டும் பொருட்டு, எதையும் செய்யத் துணியும் நிறுவனங்களுக்காகவும், பல்கலைக்கழகங்களுக்காகவும் பணியாற்றுபவராக இருப்பர். தங்களது மாற்றங்களை சமூகத்திற்கு அர்ப்பணித்திட நிரலாளர் விரும்புவார். ஆயினும் அவரது நிறுவனமோ மாற்றங்களைக் கொண்டு ஒரு தனியுரிம மென்பொருளை உருவாக்கிட நினைக்கும்.

நாங்கள் நிறுவனத்திடம் மென்பொருளை கட்டற்று வெளியிடாது போனால், அது சட்டப்படி தவறு என எடுத்துரைத்த பின்னர், இறுதியாக அவர்களும் அதனை வீணாக்க விரும்பாது கட்டற்ற மென்பொருளாக வெளியிடுவர்.

நிரலொன்றை காபிலெஃப்ட் செய்ய முதற்கண் அதனைப் பதிப்புரிமம் பெற்றதாக அறிவித்து அதனை வழங்குதற்கான விதிகளில், வாங்குதற்கான விதிகள் மாற்றப்படாத பட்சத்தில், நிரல் மூலத்தையோ அல்லது அதிலிருந்து தருவிக்கப்பட்ட எந்தவொரு நிரலையோ அனைவரும் பயன்படுத்த, மாற்ற மற்றும் மறுவிநியோகம் செய்ய அனைவருக்கும் உரிமம் உண்டு எனத் தெரிவிப்பது வழக்கம். இது சட்டபூர்வமானக் கருவியும் ஆகிறது. இங்ஙனம் நிரலும் சுதந்தரங்களும் பிரிக்க முடியாதவை ஆகின்றன.

தனியுரிம நிரலாக்க நிறுவனங்கள் பதிப்புரிமமாகிய காபிரைட்டை (Copyright) பயனர்களது சுதந்தரத்தை பிடுங்க பயன்படுத்துகின்றனர். நாங்கள் காபிரைட்டை சுதந்தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கப் பயன்படுத்துகிறோம். எனவேதான் காபிரைட்டை காபிலெஃப்ட் எனத் திருத்தி பயன்படுத்துகிறோம்.

காபிலெஃப்ட் பொதுவானதொரு கருத்தாக்கம் ஆகும். பொதுவான கருத்தாக்கங்களை நேரடியாக அப்படியே பயன்படுத்த முடியாது. அதன் குறிப்பிட்ட செயல்வடிவங்களையே நடைமுறைபடுத்த முடியும். குனு திட்டத்தை பொறுத்த மட்டில் பெரும்பாலான மென்பொருளை வழங்கிட நாங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட விதிகள் குனு பொதுமக்கள் உரிமத்தில்(GNU General Public License) இருக்கின்றன. குனு பொதுமக்கள் உரிமம் பொதுவாக குனு ஜிபிஎல் (GNU-GPL)என வழங்கப்படுகிறது.

குனுவின் கட்டற்ற ஆவணமாக்க உரிமம் (GNU Free Documentation License – GFDL)கையேடுகள், உரைப் புத்தகங்கள் முதலிய ஆவணங்களுடன் பயன்படுத்தத்தக்க காபிலெஃப்டின் வடிவமாகும். இது மாற்றியோ மாற்றாமலோ, இலாப நோக்கத்திற்காகவோ இலாப நோக்கமற்றோ, நகலெடுக்க மறுவிநியோகம் செய்யத் தேவையான உத்தரவாதத்தை அனைவருக்கும் அளிக்கிறது.

பல்வேறு கையேடுகளில் அவற்றிற்குரிய உரிமம் இணைக்கப் பட்டுள்ளதோடு, ஒவ்வொரு குனு மூல நிரல் வழங்கல்களிலும் உள்ளடக்கப்படுகிறது.

தாங்கள்தான் பதிப்புரிமைதாரர் என அனுமானித்துக் கொண்டு இவ் உரிமங்கள் அனைத்மையும் தங்களது பணிகளுக்கும் பொருத்தலாம். இதனை செய்யும் பொருட்டு தாங்கள் உரிமத்தினை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. உரிமத்தின் நகலொன்றை தங்கள் பணிகளில் உள்ளடக்கி, மூலக் கோப்புகளில் உரிமத்தினை ஒழுங்காகச் சுட்டும் குறிப்புகளைத் தரவும்.

பல்வேறு நிரல்களுக்கு ஒரே மாதிரியான வழங்கல் விதிகளை பயன்படுத்துவது அவற்றுக்கிடையே நிரல் மூலங்களை நகலெடுத்துப் பயன்படுத்த துணைபுரியும். இவையனைத்தும் ஒரே வழங்கல் விதிகளை பயன்படுத்துவதால் இவற்றின் விதிகள் ஒன்று மற்றொன்றுடன் பொருந்துகிறதா என சரிபார்க்க வேண்டிய கட்டாயமில்லை.

 

License

Icon for the Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License

கட்டற்ற மென்பொருள் Copyright © 2015 by ம. ஸ்ரீ. ராமதாஸ் is licensed under a Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book