6 கல்விக் கூடங்களுக்கு கட்டற்ற மென்பொருள் ஏன் தேவை?

கணினியினைப் பயன்படுத்தக் கூடிய எவருமே கட்டற்ற மென் பொருளைத் தழுவுவதற்கான பொதுவானக் காரணங்கள் உள்ளன. இதன் மூலம் பயனர்கள் தங்கள் கணினியினைத் தாங்களே கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றலைப் பெறுகிறார்கள். தனியுரிம மென்பொருட்களால் ஆனக் கனிணி, அம்மென்பொருளை உருவாக்கியவர் சொல்படி கேட்கும். பயன்படுத்துபவரின் விருப்பப்படி அல்ல. பயனர்கள் தங்களுக்கு இடையே கூட்டுறவாடி நேர்மையான வாழ்வு வாழவும் கட்டற்ற மென்பொருள் துணை நிற்கிறது. இக்காரணங்கள் அனைவருக்கும் பொருந்துவது போலவே கல்விக் கூடங்களுக்கும் பொருந்தும்.

இதையும் தாண்டி கல்விச் கூடங்களில் கட்டற்ற மென்பொருட்கள் பயன் படுத்தப்பட வேண்டியதற்கான முக்கியமான காரணங்கள் உள்ளன. அவற்றை எடுத்துச் சொல்வதே இவ்வுரையின் நோக்கம்.

முதற்கண் கல்விச் சாலைகளின் செலவுகளைக் குறைக்க இது உதவும். பணக்கார நாடுகளில்கூட கல்விகூடங்களில் பணப் பற்றாக்குறை உள்ளது. ஏனைய பயனர்களுக்கு அளிக்கப்படுவது போலவே நகல் எடுத்து மறு விநியோகம் செய்யக்கூடிய சுதந்திரம் வழங்கப்படுவதால், கல்விக் கூடங்களில் பல கணினிகளிலும் நகலெடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஏழை நாடுகளில் நிலவும் டிஜிட்டல் இடைவெளியினை குறைக்க இது உதவுகிறது. தெளிவான இக்காரணம் முக்கியமான ஒன்றானாலும் ஆழமற்றது. கல்விச் சாலைகளுக்கு இலவச நகல்களைக் கொடுப்பதன் மூலம் இதனை தனியுரிம மென்பொருட்களை உருக்குவோர் ஈடுசெய்து விடுவர். (காத்திருந்து பாருங்கள்!) இதனை ஏற்கும் பள்ளிகள் இம்மென் பொருட்களை மேம்படுத்த நாளை விலைக் கொடுக்க வேண்டியிருக்கும்). ஆக இவ்விஷயத்தின் ஆழமான காரணங்களை பற்றி அலசுவோம்.

பள்ளிகள், மாணவர்களுக்கு ஒட்டுமொத்த சமுதாயமும் மேம்பட வழிவகுக்கக் கூடிய வாழ்க்கை முறையினை கற்று கொடுக்க வேண்டும். மறு சுழற்சி முறைகளை ஊக்குவிப்பது போலவே அவர்கள் கட்டற்ற மென்பொருளை ஊக்குவிக்க வேண்டும். பள்ளிகள் கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தினால் மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகும் கட்டற்ற மென்பொருளையே பயன்படுத்துவார்கள். இது பெரிய நிறுவனங்களின் ஆதிக்கப் பிடியிலிருந்து சமுதாயத்தை காப்பாற்றி உதவுகிறது. பிள்ளைகளை பழக்கப்படுத்தி அடிமையாக்கும் பொருட்டு, புகையிலை நிறுவனங்கள் இலவச சிகரெட்டுகளைக் கொடுப்பதைப் போல் இப்பெரிய நிறுவனங்களும் பள்ளிகளுக்கு இலவச மாதிரிகளைத் தந்து உதவுகிறார்கள். இம்மாணவர்கள் வளர்ந்து பட்டம் பெற்ற பின்னர் இதே சலுகைகளை இவர்கள் கொடுக்க மாட்டார்கள்.

மென்பொருள் இயங்குவது எப்படி என்பதை மாணவர்கள் கற்க கட்டற்ற மென் பொருள் உதவுகிறது. விடலைப் பருவத்தினை அடையும் போது இவர்களில் சிலர் தாங்கள் பயன்படுத்தும் கணினி மற்றும் மென்பொருட்களைப் பற்றிய அனைத்தையும் அறிய ஆசைப்படுகிறார்கள். சிறந்த நிரலாளர்களாக வரக் கூடியோர் கற்பதற்கானப் பருவம் இது. சிறந்த மென்பொருட்களை எழுதக் கற்க வேண்டுமாயின், இயற்றப் பட்ட நிரல்களை வாசிக்கவும், புதிய நிரல்களை இயற்றியும் பழக வேண்டும். மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய நிரல்களை கற்று புரிந்து கொள்ள வேண்டும். தாங்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய மென்பொருட்களின் நிரல்களைக் கற்க இவர்கள் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருப்பார்கள்.

தனியுரிம மென்பொருட்கள் இவர்களின் அறிவுப் பசிக்கு தடை போடுகிறது. “தாங்கள் கோரும் அறிவு இரகசியமானது – கசடறக் கற்பது தடைச் செய்யப் பட்டுள்ளது!” எனக் கூறுகிறது. இதுவே தொழில் நுட்ப விஷயங்களை பொது மக்கள் அறியாதபட செய்கிறது. கட்டற்ற மென்பொருள் அனைவரும் கற்பதற்கு ஊக்கமளிக்கின்றது. கட்டற்ற மென்பொருள் சமூகம், “தொழில் நுட்ப ஏகாதிபத்தியத்தை தகர்க்கிறது”. எந்த நிலையில் ஒருவர் இருந்தாலும் எவ் வயதானாலும் மாணவர்களை, மூல நிரல்களைப் படித்து அவர்கள் அறிய விரும்பும் வரை கற்க ஊக்கமளிக்கிறது. கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்தும் பள்ளிகள் சிறப்பாக நிரலொழுதும் மாணவர்கள் முன்னேற வழி வகைச் செய்கின்றன.

கட்டற்ற மென்பொருட்களைக் கல்விக் கூடங்கள் பயன்படுத்த வேண்டியதற்கான அடுத்தக் காரணம் இன்னும் ஆழமானது. அடிப்படைக் கூறுகளையும் பயனுள்ள ஆற்றல்களையும் பள்ளிகள் கற்றுக் கொடுக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். இத்துடன் இவர்களுடைய பணி நிறைவடைந்து விடுவதில்லை. பள்ளிகளின் அடிப்படை நோக்கம் மக்கள் நல்ல குடிமக்களாக வாழவும், தம்மை நாடி வருவோருக்கு உதவுவதன் மூலம் நல்லதொரு சுற்றத்தினைப் பேணவும் கற்றுக் கொடுப்பதாகும். இதைக் கணினித் துறைக்கு பொருத்திப் பார்த்தோமாயின் ஆரம்பப் பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் அப்பள்ளிகள் “தாங்கள் பள்ளிகளுககு மென்பொருட்களைக் கொணடு வந்தால், அவற்றை கட்டாயம் பிற மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்” எனச் சொல்ல வேண்டும். கல்விக் கூடங்களை தாங்கள் போதிப்பதை தாங்களும் கட்டாயம் கடைபிடிக்கத்தான் வேண்டும். கல்விச் சாலைகளில் நிறுவப்பட்டுள்ள மென்பொருட்கள், மாணவர்களுக்கு நகலெடுத்து கொடுக்க, இல்லங்களுக்கு எடுத்துச் செல்ல, மீண்டும் பிறருக்கு மறு விநியோகம் செய்ய வல்லதாக இருத்தல் வேண்டும்.

மாணவர்களை கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்தவும், கட்டற்ற மென்பொருள் சமூகத்திற்கு பங்களிக்கச் சொல்வதே, குடிமையியலுக்கான ஒரு பாடமாகும். பண முதலைகளைப் போலல்லாது இது மாணவர்களுக்கு பொது சேவையின் உதாரணங்களை கற்றுக் கொடுக்கிறது. அனைத்து விதமான கல்விச் சாலைகளுமே கட்டற்ற மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

1. 2002ம் வருடம் குழந்தைகள் பங்குக் கொண்ட நிகழ்ச்சிகளில் இலவச சிகரெட்டுகளை விநியோகித்தமைக்ாக ஆர். ஜெ. ரெனால்ட்ஸ் டொபேகோ நிறுவனத்துக்கு 15 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அணுகவும்: http://www.bbc.co.uk/worldservice/sci-tech/featurs/health/tobaccotrial/usa.htm.

License

Icon for the Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License

கட்டற்ற மென்பொருள் by ம. ஸ்ரீ. ராமதாஸ் is licensed under a Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.