5

கட்டற்ற இயங்கு தளங்களில் இருக்கக் கூடிய மிகப் பெரிய குறைபாடு தரமான ஆவணங்கள் இல்லாது இருப்பதே. அதிக முக்கியத்துவம் வாய்ந்த நமது நிரல்கள் முழுமையான ஆவணங்களோடு வருவதில்லை. எந்தவொரு மென்பொருள் பொதிக்கும் ஆவணமாக்கம் இன்றியமையாத ஒன்றாகும். முக்கியமான கட்டற்ற மென்பொருள் பொதியொன்று கட்டற்ற ஆவணத்தோடு வராதது பெரிய குறைபாடாகும். இத்தகைய குறைபாடுகள் நம்மிடையே இன்று அதிகம் இருக்கின்றன.

பல வருடங்களுக்கு முன்னால் பேர்ல் நிரலாக்க மொழி கற்க எத்தனித்திருந்தேன். கற்பதற்குக் கட்டற்ற ஆவணம் ஒன்று கிடைத்தது. ஆனால் அதைக் கொண்டு விளங்கிக் கொள்வது கடினமாகத் தோன்றியது. பேர்ல் பயன்படுத்துவோரிடம் இதற்கு மாற்று ஏதேனும் உள்ளதா என வினவினேன். நிறைய இருக்கின்றன. ஆனால் அவை கட்டுப்படுத்துபவை என எனக்கு பதில் கிடைத்தது.

ஏனிந்த நிலைமை? இவ்வாவணங்களின் ஆசிரியர்கள் இவற்றை பதிப்பித்த ஓ’ரீலி அசோசியேட்ஸுக்காக எழுதியமையால் கட்டுடையவையாக இருந்தன.நகலெடுக்கவோ, மாற்றியமைக்கவோ, மூலக் கோப்புகளை அணுகவோ இயலாத நிலை. இத்தன்மைகளால் இவை கட்டற்ற சமூகத்தினால் அண்ட இயலாதவை ஆயின.

இங்ஙனம் நடந்தது இதுவே முதல் முறை என்று கருத வேண்டாம். தனியுரிம ஆவணத் தயாரிப்பு நிறுவனங்கள், எண்ணற்ற ஆசிரியர்களை ஆசைக் காட்டி அவர்களின் ஆவணங்களை கட்டுடையவையாகச் செய்திருக்கிறார்கள். குனு திட்டத்திற்கு தோள் கொடுக்க வேண்டி, குனு பயனரொருவர் தாம் இயற்றிவரும் ஆவணம் குறித்து ஆவலுடன் தெரிவப்பதும், பின்னர் அதன் நிமித்தம் அவர் பதிப்பகத்தார் ஒருவருடன் ஒப்பந்தம் செய்து கொள்வது பற்றி கதைப்பதையும் பல முறை கேட்டிருக்கின்றோம். இவை எமது ஆசைகளில் மண்ணள்ளிப் போட்டதோடு பயன்படுத்த இலாயக்கற்றதாவும் செய்கிறது.

பெரும்பாலும் நிரலாளர்களிடத்தே நல்லதொரு உரை எழுவதற்கான திறமை அதிகம் இல்லாது போவது நாம் ஆவணங்களை இழப்பதற்கு வழிவகுத்து விடக் கூடாது.

கட்டற்ற ஆவணமென்பது கட்டற்ற மென்பொருளினைப் போலவே சுதந்தரத்தினை அடிப்படையாகக் கொண்டது. விலையினை அல்ல. இங்கே பிரச்சனை என நாம் இயம்புவது ஓ’ரீலி அஸோசியேட்ஸ் ஆவணங்களுக்காக காசு கேட்டதை அல்ல. அது முற்றிலும் ஏற்புடையதே.(கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையும் பதிப்பிக்கப் பட்ட கட்டற்ற குனு ஆவணங்களைவிற்பனைச் செய்கிறது.) ஆனால் குனுவின் ஆவணங்கள் மூல வடிவில் கிடைக்கப் பெறுகின்ற அதே வேளையில் இவ்வாவணங்கள் காகிதத்தில் மட்டுமே கிடைக்கின்றன. குனு ஆவணங்கள் நகலெடுத்து மாற்றியமைக்க அனுமதி வழங்குகிறது; பேர்ல் ஆவணங்கள் மறுக்கின்றன. இந்தத் தளைகளே பிரச்சனைக்குக் காரணம்.

கட்டற்ற மென்பொருளுக்குத் தேவையான அம்சங்களில் பெரும்பான்மையானவை கட்டற்ற ஆவணங்களுக்கும் பொருந்தும்.அனைத்து பயனர்களுக்கும் வழங்கப் பட வேண்டிய சில சுதந்தரங்களைப் பற்றியது இது. மறு விநியோகம் (வர்த்தக ரீதியிலும் கூட) காகிதத்திலானாலும் சரி, இணைய வடிவிலானாலும் சரி அனுமதிக்கப் படவேண்டும். மாற்றுவதற்கான உரிமமும் இவ்விடத்தே முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பொதுவாக, பலதரப்பட்ட கட்டுரைகளையும் புத்தகங்களையும் மாற்ற மக்கள் அனுமதி பெற வேண்டுமென்பதை இன்றியமையாத ஒன்றாக நாம் நம்பவில்லை. உரைகளுக்கான வாதங்களும் மென்பொருள்களுக்கானதும் ஒன்றல்ல. உதாரணத்திற்கு நமது செயல்களையும் எண்ணங்களையும் பிரதிபலிக்கின்ற இது போன்ற உரைகளை மாற்ற நானோ அல்லது தாங்களோ தார்மீக அனுமதித் தர வேண்டும் என நான் கருதவில்லை.

கட்டற்ற மென்பொருளுக்கான ஆவணமாக்கத்தில் மாற்றுவதற்கான சுதந்தரம் இன்றியமையாதது எனச் சொல்வதற்கு முக்கியமானதொரு காரணம் உண்டு. மென்பொருளை மாற்றுவதற்கான உரிமையினை மக்கள் பயன்படுத்துகின்ற போது சற்றே பகுத்தறியுங்கால் அம்மென்பொருளுக்கான ஆவணங்களையும் அவர்கள் மாற்றுவார்கள். இதன் மூலம் மாற்றப்பட்ட மென்பொருளுக்குகந்த ஆவணத்தினை அவர்களால் தர இயலும். ஒரு ஆவணம் நிரலாளர்களை நிரல்களை மாற்றும் போது புத்தம் புதிதாக ஆவணங்களை எழுதப் பணிக்குமாயின் அது நமது சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை.

எடுத்த எடுப்பிலேயே மாற்றம் செய்வதை தடை செய்வதை ஏற்க முடியாத அதேத் தருணத்தில், மாற்றம் செய்யும் முறைகளில் சில கட்டுப்பாடுகளை விதிப்பது ஏற்கக் கூடிய ஒன்றுதான். உதாரணத்திற்கு பிரதான ஆசிரியரின் பதிப்புரிமை வாசகங்களைப் போக்காது இருத்தல் வேண்டும், விநியோகிப்பதற்கான நெறிகளோடு ஒழுகுதல் வேண்டும் அல்லது ஆசிரியர்களின் விவரங்கள் அடங்கியப் பட்டியல் கொண்டிருத்தல் வேண்டும் முதலிய யாவும் ஏற்புடையவையே! மாற்றப்பட்ட ஆவணங்கள் மாற்றப்பட்டது என்ற குறிப்பினைப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதும் ஏற்புடையதே. தொழில்நுட்பத்தினைச் சாராத பட்சத்தில் ஒரு முழு பகுதியினை அகற்றாமலோ அல்லது மாற்றாமலோ வழங்குவதும் ஏற்புடையதே.

நடைமுறையில் இத்தகைய கட்டுப்பாடுகள் ஒரு பிரச்சனை இல்லை. ஏனெனில் பகுத்தறியும் நிரலாளர் ஒருவரை மாற்றப்பட்ட நிரலுக்கு உகந்தவாறு ஆவணத்தினையும் ஆக்குவதை இவை தடுப்பதில்லை. வேறு விதமாகச் சொல்ல வேண்டுமானால் இவை கட்டற்ற மென்பொருள் சமூகம் ஆவணத்தினை முழுமையாகப் பயன்படுத்துவதை தடை செய்வதில்லை.

ஆவணத்தின் அனைத்து விதமான தொழில்நுட்ப விவரங்களையும் மாற்ற இயலுதல் வேண்டும். அதன் பலனை அனைத்து விதமான ஊடகங்களின் வாயிலாகவும் விநியோகிக்கவும் இயல வேண்டும். இல்லையெனில் இக்கட்டுப்பாடுகள் சமூகத்திற்கு தடை விதிப்பவை. நாம் மாற்று ஏற்பாட்டைச் செய்யவேண்டியது தான்.

துரதிருஷ்டவசமாக தனியுரிம ஆவணமொன்று கிடைக்கையில் மாற்று ஆவணத்தினை எழுதுவதற்கு ஒருவர் கிடைப்பதென்பது கடினமாக உள்ளது. தடையாதெனில் பெரும்பான்மையான பயனர்கள் தனியுரிம ஆவணத்தினைத் தரமானதாகவும் போதுமானதாகவும் நினைக்கிறார்கள். அவர்களால் கட்டற்ற ஆவணத்தின் அவசியத்தை உணர முடியவில்லை. அவர்கள் கட்டற்ற இயங்கு தளத்தினிடையே நிரப்பப் படவேண்டிய இடைவெளியின் அவசியம் உணராது இருக்கிறார்கள்.

தனியுரிம ஆவணங்கள் தரமானது எனப் பயனர்கள் ஏன் கருதுகிறார்கள்? சிலர் இப்பிரச்சனைக்கு செவிமடுப்பதே இல்லை. இவ்வுரை இதனை மாற்றுவதற்குத் தமது பங்காற்றும் என நாம் நம்புகிறோம்.

ஏனைய பயனர்கள் தனியுரிம மென்பொருட்களை ஏற்பதற்கு என்ன காரணமோ அதே காரணங்களுக்காக தனியுரிம ஆவணங்களையும் ஏற்புடையாதாகக் கருதுகிறார்கள். நடைமுறை இலாபங்களை மட்டுமே அவர்கள் கருத்தில் கொள்கிறார்கள். சுதந்தரத்தினை அல்ல. இத்தகைய கருத்துக்களைக் கொள்ள இவர்களுக்கு உரிமை இருக்கிற அதே வேளையில், இக்கருத்துக்கள் சுதந்தரத்தினை உள்ளடக்காத சிந்தனைகளிலிருந்து வருகிற காரணத்தால் நமக்கு வழிகாட்டியாக ஒருபோதும் இருப்பது இல்லை.

இவ்விஷயத்தைப் பற்றிய செய்தியினைப் பரப்புங்கள். நாம் தனியுரிம பதிப்புக்களின் காரணமாக ஆவணங்களை இழந்து வருகின்றோம். நாம் தனியுரிம ஆவணங்களின் போதாமையினைப் பரப்பினால், குனுவிற்கு ஆவணமெழுதுவதின் மூலம் உதவி செய்ய விரும்பும் ஒருவர், அது கட்டற்றதாக இருக்க வேண்டும் என்பதனை உணர்வார்.

வர்த்தக நோக்கத்தோடு செயல்படும் பதிப்பகத்தாரைக் கூட காபிலெப்ஃட் செய்யப் பட்ட கட்டற்ற ஆவணங்களை விற்பனைச் செய்வதற்கு நாம் ஊக்குவிக்கலாம். ஆவணமொன்றினை தாங்கள் வாங்கும் முன்னர் அவை காபிலெப்ஃட் செய்யப்பட்டதா அல்லது காபிலெஃட் செய்யப்படாததா என்பதனைச் சரி பார்த்து வாங்குவது இதற்குத் தாங்கள் உதவுவதற்கான வழிகளில் ஒன்று.

[குறிப்பு: பிற பதிப்பகத்தாரிடமிருந்து கிடைக்கக் கூடிய கட்டற்ற புத்தகங்களின் பட்டியல் கிடைக்கப் பெறுகின்றன.]

License

Icon for the Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License

கட்டற்ற மென்பொருள் Copyright © 2015 by ம. ஸ்ரீ. ராமதாஸ் is licensed under a Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book